புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாலிபரிடம் பணம் பறித்த மர்ம நபர்
|போலீசார் வாலிபரிடம் பணம் பறித்த மோசடி நபரை தேடி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். சமீபத்தில், இவரது 'வாட்ஸ் அப்'பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அதில், ராகேஷ் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்று, ஆபாசமாக போலியாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து ராகேஷ் அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்தில் அவரது 'வாட்ஸ் அப்' எண்ணில் மர்ம நபர் ஒருவர் பேசினார். அந்த மர்ம நபர், ராகேஷின் ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாகவும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க ரூ.1.20 லட்சம் வேண்டும் என்றும் கேட்டார்.
இதனால் பயந்துபோன ராகேஷ், குறிப்பிட்ட நபரின் வங்கி கணக்கிற்கு, ரூ.1.20 லட்சத்தை அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகேஷிடம் பணம் பறித்த மோசடி நபரை தேடி வருகிறார்கள்.