< Back
மாநில செய்திகள்
விண்ணில் இருந்து தனியார் பள்ளிக்குள் விழுந்த மர்ம பொருள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விண்ணில் இருந்து தனியார் பள்ளிக்குள் விழுந்த மர்ம பொருள்

தினத்தந்தி
|
11 April 2023 12:30 AM IST

விண்ணில் இருந்து தனியார் பள்ளிக்குள் விழுந்த மர்ம பொருளால் வடமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

பயங்கர வெடிச்சத்தம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, அவ்வப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. அதன்படி நேற்று காலை 11.25 மணி அளவில் திண்டுக்கல் நகர், வடமதுரை, அய்யலூர், எரியோடு, தாமரைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

அந்த சமயத்தில், நிலஅதிர்வு ஏற்படுவது போன்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியே அச்சத்துடன் ஓடிவந்தனர். கதிகலங்க வைக்கும் பயங்கர வெடிச்சத்தத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மர்மபொருள்

இந்தநிலையில் வெடிச்சத்தம் கேட்டபோது, மர்ம பொருள் ஒன்று புகையுடன் வானில் இருந்து பறந்து வந்து, வடமதுரையில் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தி இருந்த கார் மீது விழுந்தது. இதில், அந்த காாின் பின்பக்க மின்விளக்கு உடைந்து சேதம் அடைந்தது.

இதற்கிடையே அந்த மர்மபொருள் சோதனை செய்யப்பட்டது. அது பிளாஸ்டிக்கால் ஆன ஒரு பெரிய குழாயின் மூடி போன்ற தோற்றத்தில் காட்சி அளித்தது. 3 அங்குலம் உயரமும், 6 அங்குலம் அகலமும், சுமார் 750 கிராம் எடை கொண்டதாகவும் இருந்தது. மேலும் அதன் உள்பகுதியில், மூடியின் எடையை அதிகரிக்கும் விதமாக சிமெண்டால் பூசப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த யார் மீதும் அந்த மர்மபொருள் விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த மர்மபொருளை போலீசார் கைப்பற்றினர். அதனை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அடிக்கடி வெடிச்சத்தம் கேட்டு வந்த நிலையில், திடீரென மர்மபொருள் ஒன்று வானில் இருந்து பறந்து விழுந்த சம்பவம் வடமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்