< Back
மாநில செய்திகள்
சாலையோரம் குவிக்கப்பட்ட இரும்பு குவியல் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சாலையோரம் குவிக்கப்பட்ட இரும்பு குவியல் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
11 Sept 2023 2:35 PM IST

சாலையோரம் குவிக்கப்பட்டு கிடந்த இரும்பு பொருட்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

கல்லூரி மாணவர்

திருவள்ளூர் அடுத்த திருவூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் இம்மானுவேல் ராஜன் (வயது 19). இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். பகுதி நேரமாக இவர் பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இரவு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற இமானுவேல் ராஜன் வேலை முடிந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கம்பெனியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருநின்றவூர் அடுத்த கொரட்டூர் புதுச்சத்திரம் அருகே சாலையோரம் அமைந்துள்ள காயலான்கடை எதிரே பழைய இரும்பு பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தது.

பரிதாப சாவு

தூக்க கலக்கத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இமானுவேல் ராஜன் திடீரென சாலையோரம் குவிக்கப்பட்டு இருந்த இரும்பு கழிவுகள் மீது மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த இம்மானுவேல் ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருத்தணி அடுத்த தெக்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு கரண் (வயது 23) என்ற மகனும், சுபா (வயது 25) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருத்தணி அரக்கோணம் ரோட்டில் உள்ள செல்போன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டிற்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

திருத்தணி சித்தூர் சாலையில் பிரபல துணிக்கடை அருகே சென்றபோது, இடதுபுறத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் கரணின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கரண், சுபா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுபா மட்டும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து கரண் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்