காஞ்சிபுரம்
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
|சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லியில் இருந்து வண்டலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து மதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் பன்னீர்செல்வம் (52) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் ஓரங்களில் ஏராளமான டீ கடைகளும், உணவகங்களும் இருப்பதால் விதிமுறைகளை மீறி சாலையின் ஓரம் வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.