< Back
மாநில செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் வேதனை விஷம் குடித்த தாய் உயிரிழந்தார்
சென்னை
மாநில செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் வேதனை விஷம் குடித்த தாய் உயிரிழந்தார்

தினத்தந்தி
|
27 July 2023 12:56 PM IST

மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் வேதனையிலிருந்த தாய் விஷம் குடித்து உயிரிழந்தார்.

சென்னை,

புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவருடைய மனைவி கலைச்செல்வி (60). இவர்களுக்கு மணிகண்டன் (27) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஆறுமுகம் தனது மனைவி, மகனுடன் கடந்த 21-ந் தேதி இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை திருவான்மியூருக்கு வந்தார். அங்கிருந்து கீழ்கட்டளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல திருவான்மியூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கீழ்க்கட்டளை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

3 பேரும் மிகவும் சோர்வாக இருப்பதை கண்ட பஸ் கண்டக்டர், ஆறுமுகத்திடம் விசாரித்தார். அப்போது, அவர் தாங்கள் 3 பேரும் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த கண்டக்டர், 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தார். திருவான்மியூர் போலீசாரும் விரைந்து வந்தனர். 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், ஆறுமுகத்தின் 27 வயது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், பிறரை அடிப்பது உள்ளிட்ட சில செய்கைகளால் கணவன், மனைவி இருவரும் மன வேதனையில் இருந்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று திருவான்மியூர் பஸ் நிலையத்தில் பூச்சி மருந்தை தண்ணீர் பாட்டிலில் கலந்து ஆறுமுகம், அவருடைய மனைவி கலைச்செல்வி இருவரும் அருந்திவிட்டு மகன் மணிகண்டனுக்கும் கொடுத்ததும் தெரியவந்தது.

இந்தநிலையில், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகம் மற்றும் அவருடைய மகன் மணிகண்டன் இருவரும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்