< Back
மாநில செய்திகள்
ஊழியரின் மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஊழியரின் மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கு

தினத்தந்தி
|
23 July 2023 12:15 AM IST

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஊழியரின் மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கால் பரபரப்பு ஏற்பட்டது.

குழித்துறை,

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஊழியரின் மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கால் பரபரப்பு ஏற்பட்டது.

சாவியை பிடுங்கி எடுத்த குரங்கு

குழித்துறை நகராட்சி அலுவலகம் மார்த்தாண்டம் வெட்டுமணியில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் நகராட்சி சுகாதார அலுவலகம், இ-சேவை மையம் போன்ற அலுவலகங்களும் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் ஊழியர்களும், பொதுமக்களும் நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

இங்கு நேற்று முன்தினம் ஊழியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் மோட்டார் சைக்கிளை நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு உள்ளே சென்றார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுக்க மறந்து விட்டார்.

மாலையில் பணிகள் முடித்த பின்பு அந்த ஊழியர் வெளியே வந்து தனது மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய மோட்டார் சைக்கிளின் முன்பக்க பகுதியில் ஒரு குரங்கு அமர்ந்திருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே அவர் குரங்கை விரட்ட சத்தம் போட்டார். அப்போது அந்த குரங்கு பல் இளித்து சத்தம் போட்டவாறு மோட்டார் சைக்கிளில் இருந்த சாவிக்கொத்தை எடுத்துவிட்டு அங்கிருந்து ஓடியது. அது துள்ளி குதித்தவாறு பக்கத்தில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டது.

போக்கு காட்டிய குரங்கு

சாவிக்கொத்தை குரங்கு எடுத்துச் சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் குரங்கிடம் இருந்து அதை வாங்குவதற்காக சத்தம் போட்டும், சைகை காட்டியும் பல விதத்தில் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் எதற்கும் அந்த குரங்கு மசியவில்லை.

இதற்கிடையே அங்கு பொதுமக்களும், நகராட்சியில் உள்ள பிற ஊழியர்களும் கூடினர். அவர்களும் பல வித்தைகளை காட்டி குரங்கிடம் இருந்து சாவிக்கொத்தை பெற முயற்சி செய்தனர். ஆனால் குரங்கு அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் அங்கு நின்றவர்கள் ஒரு கட்டையை எடுத்து குரங்கு இருந்த பகுதியை நோக்கி வீசினர்.

ஆனால் அதை பொருட்படுத்தாத குரங்கு மரக்கிளையில் இருந்து அருகில் இருந்த கூரையில் தாவி தன் கையில் இருந்த சாவிக்கொத்தை அவர்களை பார்த்து ஆட்டியவாறு போக்கு காட்டியது. மேலும் அவர்களை பார்த்து பல்லைக் காட்டி 'என்கிட்ட ஏமாந்துட்டீங்களே' என்பது போல் சேட்டைகள் செய்து கொண்டிருந்தது.

வீசி எறிந்தது

இதனால் நகராட்சி ஊழியர் குரங்கிடம் இருந்து சாவியை வாங்க முடியாமல் தவித்தவாறு அங்கே சோர்ந்து நின்றார். அதைத் தொடர்ந்து குரங்கு மேலும் அவரை சோதிக்க விரும்பாமல் கையில் இருந்த சாவிக்கொத்தை அவரை நோக்கி அலட்சியமாக வீசி எறிந்தது. தொடர்ந்து அந்த குரங்கு மரக்கிளைகளில் தாவி அங்கிருந்து சென்று விட்டது. குரங்கிடம் இருந்து சாவிக்கொத்தை பெற்ற மகிழ்ச்சியில் நகராட்சி ஊழியர் அதை எடுத்து சென்றார். அத்துடன் அங்கே கூடி நின்ற பொதுமக்களும் குரங்கின் சேட்டைகளை ரசித்தவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்