< Back
மாநில செய்திகள்
விளைநிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்ட நவீன ஜீப்
விருதுநகர்
மாநில செய்திகள்

விளைநிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்ட நவீன ஜீப்

தினத்தந்தி
|
26 July 2023 8:17 PM GMT

விளைநிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்ட நவீன ஜீப் பயன்படுத்துவதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விளைநிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்ட நவீன ஜீப் பயன்படுத்துவதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

சாம்பல் நிற அணில்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் அரிதாக காணப்படும் சாம்பல் நிற அணில்கள் உள்ளன. மேலும் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, மான், கரடி போன்ற ஏராளமான அரிய வகை வனவிலங்குகள் உள்ளன.

மிகப்பெரிய பள்ளத்தாக்குகளை கொண்ட இந்த வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் குடிநீருக்காக ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாப்டூர், வத்திராயிருப்பு, பிளவக்கல் போன்ற மலை அடிவாரப்பகுதியில் இறங்கி விவசாய நிலங்களுக்குள் செல்கின்றன.

மரங்கள் சேதம்

அவ்வாறு செல்லும் வன விலங்குகள் தென்னை, நெல், பருத்தி, கடலை, மா மரம், பலாமரம் ஆகியவற்றை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். இந்தநிலையில் வனத்துறை சார்பில் வனப்பகுதிகளுக்கு வரும் வன விலங்குகளை விரட்ட புதிய ஜீப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜீப்பில் அதிபயங்கரமாக ஒலி மற்றும் ஒளியை ஏற்படுத்தக்கூடிய ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 4 புறங்களிலும் அதிக பவர் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

விலங்குகளை விரட்ட ஜீப்

விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து சேதப்படுத்துவது குறித்து விவசாயிகள் தகவல் தெரிவித்தால் உடனடியாக வனத்துறையினர் அந்த ஜீப்பில் வந்து அதிபயங்கர ஒலி, ஒளியை ஏற்படுத்தி வன விலங்குகளை விரட்டுகின்றனர்.

கடந்த சில நாட்களாக அடிவாரப்பகுதியில் இருந்த யானைகளை விரட்ட இந்த ஜீப்பில் இருந்த ஒளியை பயன்படுத்தியதின் பேரில் யானைகள் பயந்து கொண்டு மேல் நோக்கி ஓடி உள்ளது. மான்கள் கூட்டம், கூட்டமாக அடிவாரப் பகுதிக்கு வந்தாலும் இந்த ஜீப்பின் வெளிச்சம் மற்றும் சத்தத்தை கண்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இந்த நடவடிக்கையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு ஜீப்பைக்கொண்டு வன விலங்குகளை விரட்ட முடியாது. எனவே 5 ஜீப்புகள் வழங்க வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வன விலங்குகளை விரட்ட புதிய ஜீப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்