திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
|திருப்பத்தூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
ஆய்வுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்களின் தலா 10 முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், கோ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளில் தென்பெண்ணை-பாலாறு நதியை இணைக்கும் திட்டம், ஜோலார்பேட்டை பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி, ஏலகிரியில் தாவரவியல் பூங்கா, உழவர் சந்தை, குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, ஜோலார்பேட்டை புறவழிச்சாலை, தொழிற்பேட்டை, ஜோலார்பேட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத்திட்டம், நகர புறவழிச்சாலை பணி நிலம் கையகப்படுத்துதல், திருப்பத்தூர்-கந்திலி-பருகூர் வரை தேசிய நெடுஞ்சாலை இணைப்பு, திருவண்ணாமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கந்திலி, திருப்பத்தூர் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளை இணைத்தல், மட்டறப்பள்ளி கிராமத்தை மையமாக கொண்டு புதிய வருவாய் உள்வட்டமும், புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு, குரும்பேரி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்குதல், சிவராஜ்பேட்டை பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆம்பூர்
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளான ரெட்டிதோப்பு ெரயில்வே மேம்பாலம் பணி விரைந்து செயல்படுத்துதல், இத்தொகுதியில் விடுபட்ட கிராம ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவாக செயல்படுத்துதல், சாணாங்குப்பம் பகுதியில் உழவர் சந்தை மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு, சுட்டகுண்டா வனப்பகுதி வழியாக ஆந்திரா-பெத்தூர் வரை 3½ கிலோ மீட்டர் செல்லும் பழைய ராணுவ சாலை புதுப்பித்தல், வடகரை-மின்னூர் இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அல்லது பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. அமைத்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளான நியூடவுன் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல பாலம் அமைத்தல், வாணியம்பாடி அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். மல்லகுண்டா பகுதியில் தொழில் பூங்கா, வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட வளாகம், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் செக்டேம், படகுசவாரி, கழிவறை, உடை மாற்றும் அறை அமைத்து சுற்றுலா தளமாக அறிவிப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது.
4 சட்டமன்ற உறுப்பினா்கள் வழங்கியுள்ள 40 கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, உதவி ஆணையர் (கலால்) பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் செந்தில் மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.