5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
|காஞ்சிபுரம் அருகே 5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் அங்கேயே உள்ள மாணவ-மாணவிகளுக்கான விடுதிகளில் தங்கி உள்ளனர்.
விடுமுறை நாளான நேற்று இரவு விடுதியின் 5-வது மாடியில் இருந்து மாணவி ஒருவர் அழுது கொண்டே கீழே குதிப்பதற்காக நின்றுள்ளார். இதைப் பார்த்த சிலர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், அதற்குள் அந்த மாணவி 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெர்லி என்பதும், அவர் எம்.பி.பிஎஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.