திருவள்ளூர்
பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலி
|பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50) மீனவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு சென்றார். அதன் பின்னர் மாலையில் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து சீனிவாசனை அவரது உறவினர்கள் பூண்டி ஏரிக்கு வந்து பார்த்தனர். அப்பொழுது அங்கு சீனிவாசன் பயன்படுத்திய படகு மட்டும் இருந்துள்ளது. ஆனால் சீனிவாசனை காணவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் சீனிவாசனை பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டு இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பூண்டி ஏரியில் ஆண் சடலம் ஒன்று மீன் பிடிக்கும் வலையில் சிக்கி மிதந்துக் கொண்டிருப்பதாக புல்லரம்பாக்கம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஏரிக்குள் நீரில் மிதந்துக் கொண்டிருந்த சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். விசாரணையில் அவர் மீன் பிடிக்க சென்று காணாமல் போன சீனிவாசன் உடல் என்பது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து போலீசார் சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். ஏரிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சீனிவாசன் படகில் இருந்து தவறி மீன்பிடிக்கும் வலையில் சிக்கி வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.