சென்னை
கொலை வழக்கில் சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறித்தவர் கைது
|கொலை வழக்கில் சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறித்த தந்தை கைது செய்யப்பட்டார்.
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவர் கடந்த 17-ந் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மூதாட்டி கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது எலியாஸ் (வயது 56) என்பவர் மூதாட்டியிடம் நகை பறித்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், கடந்த செப்டம்பர் 4-ந் தேதி அயனாவரம் பகுதியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் முகமது எலியாசின் மகன் முகமது பியாஸ் (வயது 25) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மகனை ஜாமீனில் அழைத்து வர பணம் இல்லாததால் மூதாட்டியிடம் நகையை பறித்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அடகு கடையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் நகையை பறிமுதல் செய்த போலீசார் முகமது எலியாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.