சென்னை
வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் குறும்பு செய்தவர் கைது
|வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் குறும்பு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 23). இவர், வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் விஜயநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அருண்குமாரின் காதலிக்கு முத்தம் கொடுப்பது போல் சைகை காட்டி குறும்பு செய்தனர். இதை காதலனிடம் தெரிவித்தார். இதனால் அருண்குமார், மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு, அவர்கள் 2 பேரிடமும் இதுபற்றி தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே 2 வாலிபர்களும் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் கத்தியுடன் வாக்குவாதம் செய்த 2 வாலிபவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் அங்கிருந்து ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். பிடிபட்ட மற்றொரு வாலிபரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய தீபன் (20) என்பவரை தேடி வருகின்றனர். கைதானவரிடம் இருந்து 3 அடி நீளமுள்ள 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.