சென்னை
உளவுத்துறை போலீஸ் போல நடித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் ரூ.7 லட்சம் பறித்தவர் கைது
|மத்திய உளவுத்துறை போலீஸ் போல நடித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் ரூ.7 லட்சம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் தி.மு.க.வை சேர்ந்த சம்பத் (வயது 49). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
சம்பத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'நான் மத்திய உளவுத்துறை போலீஸ். நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் வந்து உள்ளது. நீங்கள் வருமானம் குறித்த கணக்கு காட்டாமல் உள்ளீர்கள். உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உங்கள் கார், வீடு உள்ளிட்டவைகளை ஜப்தி செய்து விடுவோம். எனக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் உங்களை அந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுவோம்' என மிரட்டினார்.
இதனால் பயந்து போன சம்பத் ரூ.7 லட்சத்தை தனது டிரைவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். அந்த மர்ம நபர் ரூ.7 லட்சத்தை பெற்று கொண்டு டிரைவரிடம், 'உன் முதலாளியிடம் போய் சொல்லு. யாரிடமாவது இது குறித்து கூறினால் கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டினார்.
இதனால் மன உளைச்சலில் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பத் வீடு திரும்பினார். பின்பு அவர் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். அந்த நபர் சென்னை புளியந்தோப்பு நரசிம்மா நகர் 5-வது தெருவை சேர்ந்த தாமோதரன் (38) என்பதும், மத்திய உளவு துறை போலீசாக நடித்து சம்பத்திடம் ரூ.7 லட்சம் பறித்ததும் தெரியவந்தது. தாமோதரனை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.