< Back
மாநில செய்திகள்
வேறு ஒருவர் வீட்டை தன்னுடையதாக காட்டி பெண்களிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வேறு ஒருவர் வீட்டை தன்னுடையதாக காட்டி பெண்களிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது

தினத்தந்தி
|
4 July 2023 3:44 PM IST

வேறு ஒருவர் வீட்டை தன்னுடையதாக காட்டி 2 பெண்களிடம் குத்தகை பணமாக ரூ.3 லட்சம் வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் விப்ரோ தெருவில் உள்ள தனது வீட்டை அனிதா சச் தேவ் (வயது 61) என்ற மூதாட்டி குத்தகைக்கு விட செல்போன் செயலியில் பதிவிட்டார். இதை கண்ட சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன் (37) என்பவர் மூதாட்டியிடம் ரூ.2 லட்சத்தை கொடுத்து விட்டு வீட்டை குத்தகைக்கு எடுத்தார்.

அந்த வீட்டில் மனைவி குழந்தைகளுடன் சிறிது காலம் தங்கி இருந்து விட்டு பின்னர் அனிதா சச் தேவ் வீட்டை தனது வீடு என்றும், அதை குத்தகைக்கு விடுவதாக லட்சுமி நாராயணன் செல்போன் செயலியில் பதிவு செய்தார்.

இந்த விளம்பரத்தை பார்த்து போன் செய்த மோனிஷ் என்ற இளம்பெண்ணிடம் லட்சுமி நாராயணன் வீட்டை காண்பித்து முன்பணமாக ரூ.1 லட்சத்தை வாங்கினார். அதேபோல் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் சந்தியா என்ற பெண்ணிடமும் வீட்டை குத்தகைக்கு விடுவதாக கூறி முன்பணமாக ரூ.2 லட்சத்தை பெற்றார்.

இதை அறிந்த வீட்டின் உரிமையாளர் அனிதா சச் தேவ் இதுகுறித்து லட்சுமி நாராயணனிடம் தட்டி கேட்ட போது அவரிடம் சண்டையிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து மூதாட்டி செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லட்சுமி நாராயணன் 2 பெண்களை ஏமாற்றி முன்பணம் வாங்கியது தெரியவந்தது.

இதற்கிடையே லட்சுமி நாராயணன் தலைமறைவானார். போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் லட்சுமி நாராயணன் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் போலீசார் புதுச்சேரிக்கு விரைந்து லட்சுமி நாராயணனை கைது செய்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் அவர் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் சர்வதேச மனித உரிமை ஆணைய அமைப்பின் குற்ற எதிர்ப்பு செயலாளர் என்ற வாசகத்தை ஒட்டி போலீசாரையும், பொதுமக்களையும் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமி நாராயணன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்