< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சென்றவரை கத்தியால் வெட்டி பணம்-தங்க கட்டி கொள்ளை
சென்னை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றவரை கத்தியால் வெட்டி பணம்-தங்க கட்டி கொள்ளை

தினத்தந்தி
|
26 July 2022 7:56 AM IST

சென்னை திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை கத்தியால் வெட்டி பணம் மற்றும் தங்க கட்டிகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 42). இவர், நேற்று திருவல்லிக்கேணி ஓ.வி.எம்.தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகத்தில் முககவசம் அணிந்த மர்மநபர் ஒருவர், சாகுல் அமீதுவின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். சாகுல்அமீது மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்தார். அதற்குள் அந்த மர்மநபர், சாகுல்அமீதை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம், சுமார் 8½ பவுன் தங்க கட்டி மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, சாகுல்அமீதுவின் மோட்டார் சைக்கிளில் ஏறி மர்மநபர் தப்பிச்சென்று விட்டார்.

மேலும் தப்பிச்செல்லும்போது கீழே விழுந்து கிடந்த சாகுல்அமீதுவின் முதுகில் சிறிய கத்தியால் வெட்டிவிட்டு சென்றார். இதில் காயம் அடைந்த சாகுல்அமீது ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த துணிகர வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முககவசம் அணிந்த கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்