செங்கல்பட்டு
ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் மோதி சென்னையை சேர்ந்தவர் சாவு
|ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் மோதி சென்னையை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 41). அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (52). இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் நோக்கி சென்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் கூட்டு சாலையில் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் கோபிநாத் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கோபிநாத் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மாரிமுத்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரிமுத்துவை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.