சென்னை
அம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் நாய் குட்டியை ஏற்றி சென்றவர் பலி
|அம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் நாய் குட்டியை ஏற்றி சென்றவர் பலிமோட்டார் சைக்கிளில் நாய் குட்டியை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர், தடுப்பு சுவரில் மோதி பலியானார்.
சென்னையை அடுத்த புழல் காவாங்கரை, சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர் தீபன் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி பவானி (24) என்ற மனைவியும், நிஷாந்தினி (7) என்ற மகள், சாய் பிரசாத் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தீபன், அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு ேமாட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தனது வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது பெரியம்மா வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குட்டி ஒன்றை தீபன் தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அம்பத்தூர்-செங்குன்றம் சாலையில் கள்ளிகுப்பம் அருகே வரும்போது மோட்டார்சைக்கிளின் முன்புறம் அமர்ந்து இருந்த நாய் குட்டி நிலைதடுமாறியது.
இதனால் தீபன் நாய் குட்டியை பிடிக்க முயன்றார். இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் அவரது மண்டை இரண்டாக உடைந்து அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் தீபன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.