தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் - வானிலை மையம் அறிவிப்பு
|தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 3 தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசா முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால் நாளை மற்றும் 27-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும், வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.