கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற காதல்ஜோடி.. வாலிபர் சாவு- சிறுமிக்கு சிகிச்சை
|தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த இருவரும் கிணற்றுக்குள் குதித்தனர்.
தேனி,
தேனி அழகர்சாமி காலனியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அஜய்குமார் (வயது21). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. முறை தவறிய காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தங்களை பிரித்து விடுவார்கள் என்று எண்ணிய காதல்ஜோடி நேற்று வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் தேனி உழவர்சந்தை அருகே உள்ள தனியார் தோட்டத்துக்கு சென்றனர்.
'காதலர்களாக சேர்ந்து வாழத்தான் முடியவில்லை. சாகும்போதாவது சேர்ந்தே சாவோம்' என்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதையடுத்து கிணற்றில் இருவரும் சேர்ந்து குதித்தனர். அதில் கிணற்றுக்குள் விழுந்த அஜய்குமார் நீரில் மூழ்கி பலியானார். அந்த சிறுமி கிணற்றின் பக்கவாட்டில் இருந்த மரக்கிளையில் சிக்கி கொண்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கிணற்றில் மரக்கிளையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிணற்றில் இருந்து அஜய்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.