< Back
மாநில செய்திகள்
தேசம் கடந்து மலர்ந்த காதல்: சீன பெண்ணை கரம் பிடித்த தமிழக வாலிபர்
மாநில செய்திகள்

தேசம் கடந்து மலர்ந்த காதல்: சீன பெண்ணை கரம் பிடித்த தமிழக வாலிபர்

தினத்தந்தி
|
11 April 2023 2:23 AM IST

தேசம் கடந்து மலர்ந்த காதலால் சீன பெண்ணை தமிழக வாலிபர் கரம் பிடித்தார்.

கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பாலசந்தர். வணிக மேலாண்மை படித்த இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில்முனைவராக உள்ளார்.

இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோவுக்கும் சமூக வலைதள செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் அடிக்கடி 2 பேரும் பேசி வந்தனர்.

நாளடைவில் இது அவர்களிடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் சந்தித்து பேசினர். அப்போது 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இது பற்றி அவர்கள் 2 பேரும் தங்களின் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டனர். அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த காதல் ஜோடியினர் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதுவும் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்ள யீஜியோ விரும்பினார்.

திருமணம்

இதையடுத்து அவர்களின் திருமணம் நேற்று கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தமிழ் கலாசாரப்படி மணமகன் பட்டு வேட்டி, சட்டை அணிந்தும், மணமகள் பட்டுசேலை, நகைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்து இருந்தனர். பிறகு வேத மந்திரங்கள் முழங்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுபற்றி மணமகன் பாலசந்தர் கூறுகையில், நான் நியூசிலாந்து நாட்டில் தொழில்முனைவோராக உள்ளேன். ஒரு சமூக வலைதள செயலி மூலம் சீனாவை சேர்ந்த யீஜியோவின் அறிமுகம் கிடைத்தது. இதன் மூலம் சீனாவுக்கு சென்று அவரை பார்த்து பேசினேன். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். அதன்படி இந்திய, தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொண்டோம் என்றார். தேசம் கடந்து மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளதை பார்த்து, அவர்களது உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்