காஞ்சிபுரம்
சாலையோரம் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோரம் நின்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று சென்றது. லாரியை மதுராந்தகத்தை சேர்ந்த கோவிந்தன் ஓட்டி சென்றார். செங்காடு அருகே டிரைவர் கோவிந்தன் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு டீ சாப்பிடுவதற்காக சென்றார். திடீரென லாரியின் உட்புற இருக்கையில் இருந்து தீப்பிடித்து எரிய தொடங்கி மளமளவென முன்பக்கம் முழுவதுமாக வேகமாக பரவியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் மினி லாரி முழுவதும் எரிந்து முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.