கரூர்
மின் கம்பி மீது உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்
|வெள்ளியணை அருகே மின் கம்பி மீது உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி முழுமையாக எரிந்து நாசமானது.
மின் கம்பி மீது உரசியது
கரூர் மாவட்டம் தம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் என்பவருக்கு தஞ்சாவூர் பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதி திருக்கருகாவூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (34) ஓட்டி சென்றார்.
நேற்று மாலை வெள்ளியணை அருகே உள்ள அருமைக்காரன் புதூர் பகுதியில் லாரி சென்றபோது அங்கு சாலையின் குறுக்கே தாழ்வாக சென்ற மின் கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசி தீ பிடித்து கொண்டது. மேலும் தீ மள மளவென லாரி முழுவதும் பரவி லாரியுடன் சேர்ந்து எரிய தொடங்கியது.
லாரி எரிந்து நாசம்
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் தமிழ்ச்செல்வன் லாரியில் இருந்து கீழே இறங்கி அப்பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த லாரி மற்றும் வைக்கோல் கட்டுகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.