< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்லில் சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி மீது லாரி மோதி பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி மீது லாரி மோதி பலி

தினத்தந்தி
|
16 Oct 2023 3:30 AM IST

தாக்குதலில் காயமடைந்து சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி மீது லாரி மோதியதில் பலியானார். இதற்கிடையே அவர் கொலை செய்யப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதலில் காயமடைந்து சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி மீது லாரி மோதியதில் பலியானார். இதற்கிடையே அவர் கொலை செய்யப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி மீது தாக்குதல்

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை அடுத்த வண்டிப்பாதை பகுதியை சேர்ந்தவர் தர்மர் (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், தாடிக்கொம்பு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 பேரை மறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில் 2 பேரும் சேர்ந்து தர்மரை தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். காயமடைந்த தர்மர் சிறிது தூரம் நடந்து சென்று சாலையில் மயங்கி விழுந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ரத்த காயங்களுடன் சாலையில் தர்மர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், கொலை நடந்திருப்பதாக நினைத்து மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விபத்தில் பலி

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தர்மரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தர்மருடன் 2 பேர் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கிய தகவல் கிடைத்தது.

இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது தர்மருடன் இருவர் தகராறில் ஈடுபடும் காட்சிகளும், அதன் பிறகு சாலையில் மயங்கி விழுந்த அவர் மீது அந்த வழியாக வந்த லாரி மோதிய காட்சிகளும் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய மேல்விசாரணையில் தர்மர் விபத்தில் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தர்மர் அடித்துக்கொல்லப்பட்டதாக 'வாட்ஸ்-அப்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்