திருவள்ளூர்
பள்ளிப்பட்டு வாணிப கிடங்கிற்கு ரேஷன் அரிசி கொண்டு வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
|பள்ளிப்பட்டு நுகர் பொருள் வாணிப கிடங்கிற்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
வாணிப கிடங்கு
சென்னை ஆவடியில் உள்ள தலைமை நுகர்வோர் பொருள் வாணிப கிடங்கில் இருந்து 590 ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி பள்ளிப்பட்டு நுகர்வோர் வாணிப கிடங்கை நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த அன்பழகன் (வயது 42) என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.
விபத்து
பொதட்டூர் பேட்டை போலீஸ் நிலையத்தை தாண்டி சென்ற லாரி பொம்மராஜு பேட்டை கிராமம் நுழைவதற்கு முன்பு அங்குள்ள சாலை வளைவில் லாரி டிரைவர் அன்பழகன் திருப்பிய போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் சாலை ஓரம் விழுந்தது.
தகவல் கிடைத்ததும் பொதட்டூர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிசி மூட்டைகளை பாதுகாத்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் அன்பழகனை சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கு அலுவர்களுக்கு தகவல் கொடுத்து உடனே 2 லாரிகளை கொண்டு வந்து அரிசி மூட்டைகளை பத்திரமாக பள்ளிப்பட்டு நுகர் பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.