< Back
மாநில செய்திகள்
ரூ.8 லட்சம் கடன், முட்டை வியாபாரியை காரில் கடத்தி சித்ரவதைகோழி வியாபாரிகள் கைது
சென்னை
மாநில செய்திகள்

ரூ.8 லட்சம் கடன், முட்டை வியாபாரியை காரில் கடத்தி சித்ரவதைகோழி வியாபாரிகள் கைது

தினத்தந்தி
|
26 Aug 2023 1:28 PM IST

சென்னையில், ரூ.8 லட்சம் கடனுக்காக முட்டை வியாபாரியை காரில் கடத்திச்சென்று சித்ரவதை செய்ததாக, கோழி வியாபாரிகளான அண்ணன்-தம்பி அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை சூளைமேடு, சக்திநகரைச்சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 42). இவர் ஏற்கனவே சென்னை ஜாம்பஜார் பகுதியில் முட்டை கடை நடத்தி வந்தார். கடையில் நஷ்டம் ஏற்படவே, கடையை மூடிவிட்டார். தற்போது ஆட்டோ ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் காரில் வந்த நபர்கள் சிலர், சந்திரசேகரன் வீட்டு கதவை தட்டினார்கள். சந்திரசேகரன் கதவை திறந்தார். உடனே அவரை குண்டு, கட்டாக தூக்கிய வெளியில் நின்றவர்கள் காரில் ஏற்றி கடத்தி சென்றுவிட்டனர். இது தொடர்பாக சூளைமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து காரில் கடத்திச்செல்லப்பட்ட சந்திரசேகரனை தேடி வந்தார். கடத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்திரசேகரனை காரில் கடத்திய நபர்கள் யார்?, என்று தெரிய வந்தது.

சந்திரசேகரன் முட்டை கடை நடத்தியபோது, தேனாம்பேட்டையில் கோழி மற்றும் முட்டை மொத்த வியாபாரம் செய்து வந்த, சரவணகுமார் (40) என்பவரிடம், முட்டை வாங்கியதில் ரூ.8 லட்சம் கடன் பாக்கி வைத்துள்ளார். அந்த கடனை திருப்பி கொடுக்காமல், கடையை மூடிவிட்டு, சந்திரசேகரன் சூளைமேடு பகுதிக்கு வந்து குடியேறி விட்டார்.

சந்திரசேகரனை, சரவணகுமார் தேடி வந்துள்ளார். அவர் முட்டை வியாபாரத்தை விட்டு விட்டு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்ததை,சரவணகுமார் கண்டுபிடித்துவிட்டார். ரூ.8 லட்சம் கடனை வசூலிக்க சரவணகுமார், தனது சகோதரர் தேவராஜன் (39), உறவினர் கார்த்திக் (31) ஆகியோருடன் சேர்ந்துசந்திரசேகரனை காரில் கடத்தி சென்று விட்டார். சந்திரசேகரனின் ஆட்டோவையும் தூக்கிச்சென்று விட்டனர். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கடத்தப்பட்ட சந்திரசேகரனை, கோயம்பேடு பகுதியில் உள்ள பூங்காவில் வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதையும் போலீசார் கண்டுபிடித்து, குறிப்பிட்ட பூங்காவை சுற்றி வளைத்தனர்.

சந்திரசேகரனை அதிரடியாக மீட்ட போலீசார், அவரை கடத்திய சரவணகுமார், தேவராஜன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. சந்திரசேகரனின் ஆட்டோவும் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்