< Back
மாநில செய்திகள்
டாம்கோ-டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம்; பெரம்பலூரில் நாளை நடக்கிறது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

டாம்கோ-டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம்; பெரம்பலூரில் நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
7 Aug 2022 12:50 AM IST

டாம்கோ-டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம் பெரம்பலூரில் நாளை நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ, டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பொது கால கடன், தனிநபர் கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சிறுகடன், கறவை மாடு கடன் போன்ற பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி டாம்கோ-டாப்செட்கோ கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) பெரம்பலூர் தாலுகாவிற்கு நாளை (திங்கட்கிழமை) பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு வருகிற 10-ந்தேதி தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், வேப்பூர் தாலுகாவிற்கு 11-ந்தேதி குன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஆலத்தூர் தாலுகாவிற்கு 12-ந்தேதி இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடைபெறவுள்ளது. கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

டாம்கோ கடன் பெற ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். டாப்செட்கோ கடன் பெற ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கடன் வழங்கும் முகாம் நடைபெறும் நாட்களில் சாதி சான்று, வருமான சான்று, இருப்பிடச் சான்று, தொழில் செய்வதற்கான திட்ட அறிக்கை போன்ற ஆவணங்களை எடுத்து வரவேண்டும். மேற்படி கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு டாம்கோ-டாப்செட்கோ கடன் திட்டங்களில் கடன் உதவிகளை பெற்று பயனடையுமாறு கலெக்டரும் (பொறுப்பு), மாவட்ட வருவாய் அலுவலருமான அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்