< Back
மாநில செய்திகள்
பங்களாப்புதூர் அருகே வீட்டு வாசலில் கட்டியிருந்த ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி; பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
ஈரோடு
மாநில செய்திகள்

பங்களாப்புதூர் அருகே வீட்டு வாசலில் கட்டியிருந்த ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி; பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

தினத்தந்தி
|
28 Jun 2023 3:42 AM IST

பங்களாப்புதூர் அருகே வீட்டு வாசலில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

டி.என்.பாளையம்

பங்களாப்புதூர் அருகே வீட்டு வாசலில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடித்து குதறப்பட்ட ஆடுகள்

புஞ்சைதுறையாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55). இவர் 6 ஆடுகள், 3 ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கமாக இரவு நேரங்களில் ஆடு, மாடுகளை வீட்டு வாசலில் கட்டி வைத்திருப்பார். அதன்படி நேற்று முன்தினம் இரவும் கட்டி வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை பாலகிருஷ்ணன் எழுந்து வந்து பார்த்தபோது 2 ஆடுகளை காணவில்லை. இதனால் அவர் அந்த பகுதியில் தேடிப்பார்த்தார். அப்போது புஞ்சைதுறையாம்பாளையம் வனப்பகுதிக்கு செல்லும் வழியில் 2 ஆடுகளும் உடலின் பெரும்பகுதி கடித்து குதறப்பட்ட நிலையில் கிடந்தன.

இழுத்து சென்றது சிறுத்தைப்புலி

குதறிக்கிடந்த ஆடுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் இதுகுறித்து உடனே டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் ஆடுகள் கட்டப்பட்டு இருந்து இடத்தில் பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் வனத்துறையினர், ஆடுகளை கவ்வி இழுத்து சென்றது சிறுத்தைப்புலி என்று கூறினார்கள். கடந்த 22-ந் தேதி புஞ்சைதுறையாம்பாளையம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் பாலபாஸ்கரன் என்பவர் வளர்த்து வந்த ஒரு ஆட்டை சிறுத்ைதப்புலி கவ்வி இழுத்து சென்றுவிட்டது. அங்குள்ள வாழைத்தோட்டத்தில் ஆட்டை கடித்து தின்றுவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

இதையடுத்து சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்டறிய வனத்துறையினர் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர். அதன்மூலம் நடமாட்டம் தெரிந்த உடன் சிறுத்தைப்புலி கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

புஞ்சைதுறையாம்பாளையம் பகுதியில் தொடர்ந்து சிறுத்தைப்புலி ஆடுகளை வேட்டையாடி வருவதால் அப்பகுதியில் ஆடு, மாடுகள் வளர்ப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் புஞ்சைதுறையாம்பாளையம் ஊராட்சி சார்பில், 'சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாடவேண்டாம்' என்று வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்