< Back
மாநில செய்திகள்
திம்பம் மலைப்பாதை தடுப்புச்சுவரில் படுத்து தூங்கிய சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அச்சம்
மாநில செய்திகள்

திம்பம் மலைப்பாதை தடுப்புச்சுவரில் படுத்து தூங்கிய சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அச்சம்

தினத்தந்தி
|
8 April 2024 1:16 PM IST

திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் அவ்வப்போது நடமாடுவது வழக்கம்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, யானை, மான், கரடி, சிறுத்தைப்புலி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இங்கு அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் நடமாடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு 12-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் ஒரு சிறுத்தைப்புலி படுத்து தூங்கி கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்து வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்தி யாரும் வாகனங்களை விட்டு கீழே இறங்காமல் இருந்தனர். வாகனங்களின் சத்தத்தை கேட்டதும் திடுக்கிட்டு எழுந்த சிறுத்தைப்புலி சாலையில் சிறிது நேரம் அங்கும் இங்கும் நடமாடியது. பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இந்த காட்சியை வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது தற்போது வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்