அரியலூர்
ரெயில்களில் வந்த ஏராளமான பயணிகள்
|அரியலூருக்கு ரெயில்களில் ஏராளமான பயணிகள் வந்தனர்.
ரெயிலில் வந்த பயணிகள்
தீபாவளி பண்டிகை இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரியலூர் ரெயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக சொந்த ஊருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று சென்னையில் இருந்து அரியலூர் வழியாக சென்ற வைகை, பல்லவன், குருவாயூர் விரைவு ரெயில்களில் ஏராளமான பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல அரியலூரில் வந்து இறங்கினர்.
இதையடுத்து அரியலூர் ரெயில் நிலையத்தில் இருந்து செந்துறை, பெரம்பலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கு செல்வதற்காக, அரியலூர் பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்.
நடந்து சென்றனர்
ஆனால் ஆட்டோ கட்டணம் அதிகமாக இருந்ததால், ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பஸ் நிலையத்திற்கு பலர் குடும்பத்துடன் தலையில் உடைமைகளை சுமந்தபடி நடந்தே சென்றனர்.
வழக்கமாக பல்லவன் விரைவு ரெயில் அரியலூர் வந்தபோது, தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் அரியலூர் பஸ் நிலையத்திற்கு ஒரு டவுன் பஸ்சும், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் செல்வதற்கு 2 புறநகர் பஸ்களும் அரியலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் வைகை விரைவு ரெயில் அரியலூர் வரும்போது அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
பஸ்கள் இயக்க கோரிக்கை
அனைத்து ரெயில்களும் அரியலூர் வந்து செல்லும் நேரங்களில் அரியலூர் பஸ் நிலையம் வரை பயணிகள் செல்ல டவுன் பஸ்களையாவது இயக்கினால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளை தூக்கி வருபவர்கள் குறைந்த கட்டணத்தில் பஸ் நிலையம் செல்ல முடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரியலூருக்கு ரெயிலில் பயணிகள் வந்து செல்லும் நேரங்களில் தினமும் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரெயில் பயணிகளின் கோரிக்கை ஆகும்.