சிவகங்கை
பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
|பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
பக்ரீத் பண்டிகை
நாடு முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வாலாஜா நவாப் ஜூம் ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மவுலவி முஹம்மது ஆபிதின் பாக்கவி தலைமை தாங்கி தொழுகையை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை தங்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடமும் பகிர்ந்து அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து பக்ரீத் பண்டிகையை பற்றி சிவகங்கை ஆதம் பள்ளிவாசல் இமாம் மவுலவி சுல்தான் ஹைரி சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
காரைக்குடி
இதேபோல் காரைக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்குடி கிளை சார்பில் காட்டு தலைவாசல் சின்னையா அம்பலம் பள்ளி அருகில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட தலைவர் சாகுல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் ஹாரீஸ் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட, காரைக்குடி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர், இளையான்குடி
இதேபோல் காரைக்குடி வ.உ.சி. ரோடு ஆசாத் பள்ளியில் உள்ள ஈத்கா திருப்பத்தூர் அச்சுக்கட்டு பகுதியில் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்து அனைத்து ஜமாத்தினர் ஒன்றிணைந்து மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகம்மது பாரூக் ஆலீம் தலைமையில் அங்கிருந்து ஊர்வலமாக ஈத்கா மைதானத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இளையான்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் காதர்பிச்சை தெருவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இளையான்குடி மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தேகப்பா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இதேபோல் தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.