திருவண்ணாமலை
ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம்
|திருவண்ணாமலையில் ஆடி மாத பவுா்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுா்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் ஆடி மாதத்திற்காக பவுர்ணமி இன்று அதிகாலை 3.25 மணியளவில் தொடங்கியது. கிரிவலம் வரக் கூடிய பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரை சுற்றி 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நேற்று இரவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தனர்.
இதில் ஆந்திராவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன் மட்டுமின்றி பஸ்களிலும் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். வாகனம் நிறுத்தும் இடங்களில் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாகனங்களே அதிகளவில் காணப்பட்டது.
மேலும் நேற்று இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இன்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கோவிலில் நீண்ட வரிசை
காலை 8 மணி வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இருப்பினும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
அதுமட்டுமின்றி கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் பொது தரிசன வழியில் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 முதல் 5 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது.
மேலும் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பக்தர்கள் விரைந்து சாமி தாிசனம் செய்வது குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரோந்து பணியில் போலீசார்
தொடர்ந்து இன்று மாலை மீண்டும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இரவிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.