< Back
மாநில செய்திகள்
புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
மாநில செய்திகள்

புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

தினத்தந்தி
|
18 Sep 2022 11:44 AM GMT

புரட்டாசி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் தரிசனம் செய்தனர்.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவர். அதேபோல் மாத கார்த்திகை உற்சவம், தமிழ்மாத பிறப்பு, வாரவிடுமுறை ஆகிய நாட்களிலும் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட இரு மடங்கு காணப்படும்.

அந்த வகையில் இன்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், தரிசன வழிகள் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் காரணமாக வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க நேர்ந்தது. அந்தவகையில் சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி மலைக்கோவில் ஆனந்தவிநாயர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அதேபோல் பழனி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.

மேலும் செய்திகள்