திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|முகூர்த்த தினம் மற்றும் விடுமுறை நாளையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் புகழ் பெற்ற 5-ம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
பக்தர்கள் குவிந்தனர்
இந்தநிலையில் நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொதுவழியில் பக்தர்கள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
அதே போல் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.