திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
நீண்ட வரிசையில் காத்திருந்து
இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். கோவிலில் கூட்டம் காரணமாக பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை வழிகளிலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.