ஈரோட்டில் சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம்!
|கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் போது சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது.
ஈரோடு,
ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலத்தை போலவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 22-ந் தேதி ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அன்றைய தினம் 35 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதன்பிறகு தினமும் வெயில் வாட்டி வதைத்தது. ஒரு சில நாட்கள் மாலை நேரத்தில் லேசாக மழை பெய்தது.நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் பெய்த மழை சுமார் அரை மணிநேரம் நீடித்தது. இதேபோல் சென்னிமலை, பவானி, கொடுமுடி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. ஈரோட்டில் 2-வது நாளாக நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
இந்தநிலையில், கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் போது சூறாவளி காற்று வீசியதில் வெள்ளாங்கோவில், அய்யம்பாளையம், வெள்ளியங்காடு, குள்ளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.