< Back
மாநில செய்திகள்
புதுவீட்டுக்கு கோழியை பலி கொடுக்க சென்ற தொழிலாளி மரணம் - திருஷ்டி கழிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்...!
மாநில செய்திகள்

புதுவீட்டுக்கு கோழியை பலி கொடுக்க சென்ற தொழிலாளி மரணம் - திருஷ்டி கழிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்...!

தினத்தந்தி
|
28 Oct 2022 11:52 AM IST

பல்லாவரம் அருகே புதுவீட்டிற்கு திருஷ்டி கழிக்க சென்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை,

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டபட்டு அதன் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது.

இந்த நிலையில் புதிய கட்டிடத்திற்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது70) என்பவரிடம் கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராஜேந்திரன் திருஷ்டி கழிப்பதற்காக ஊதுபத்தி, சூடம், பூசணிக்காய், உயிருள்ள கோழி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு அந்த புதிய கட்டிடத்துக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கையில் இருந்த கோழி பறந்து சென்றது அதை பிடிக்க துரத்தியபோது கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த ராஜேந்திரன் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்