சென்னை
பூந்தமல்லியில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
|பூந்தமல்லியில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி நம்பி நகரை சேர்ந்தவர் ராஜி (வயது 49). இவர், கடைகளுக்கு ஐஸ்கட்டி போடும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு டில்லிபாபு என்ற மகன் உள்ளார். ராஜிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் 2-வது மாடியில் படுத்திருந்த ராஜி, நேற்று அதிகாலையில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ராஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த பூந்தமல்லி போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜி, குடிபோதையில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.