விழுப்புரம்
செஞ்சியில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை
|தக்காளி வரத்து அதிகரித்ததால் செஞ்சியில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
செஞ்சி,
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்ததது. இதனால் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தக்காளியின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக தக்காளி வாங்கும் அளவை இல்லத்தரசிகள் குறைத்து கொண்டனர்.. பெரும்பாலான வீடு மற்றும் உணவகங்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் ஆகியவை தவிர்க்கப்பட்டது. தக்காளிக்கு மாற்றாக புளி, மங்காய் ஆகியவற்றை சமையலில் பயன்படுத்தினர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை தொடங்கியது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி செஞ்சி பகுதியிலும் தக்காளி விலை குறைந்து வருகிறது. இதில் நேற்று சாலையோர கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பெண்கள் போட்டி போட்டு தக்காளியை வாங்கி சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை கணிசமாக குறைந்ததால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.