கள்ளக்குறிச்சி
புதிய உச்சம் தொட்டது:கள்ளக்குறிச்சியில் ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனைமேலும் விலை உயரும் என வியாபாரி அதிர்ச்சி தகவல்
|கள்ளக்குறிச்சியில் தக்காளி விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனையாகிறது. மேலும் விலை உயரும் என வியாபாரி அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.
நாட்டில் தக்காளி விலையானது, மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அண்டை மாநிலங்களில் மழை, தமிழ்நாட்டில் போதிய விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே மெல்ல உயர்ந்த விலை, தற்போது மக்களால் தாங்கி கொள்ள முடியாத வகையில், தாறுமாறாக எகிறி வருகிறது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தக்காளி விலை கடந்த 20 நாட்களாக, அதாவது நேற்று முன்தினம் வரை அதிகபட்சமாக கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தக்காளி வரத்து குறைவால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூபாய் 50 உயர்ந்து ரூ.180-க்கு விற்பனையானது.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தக்காளி விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தாறுமாறாக தக்காளி விலை உயர்வால், வீட்டில் சமையலுக்கு தக்காளியை எண்ணி எண்ணி பயன்படுத்தும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பீன்ஸ் ரூ.30 அதிகரிப்பு
தக்காளியை போன்று மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருப்பது, மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. அந்த வகையில், கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட் ரூ.70-க்கும், பீன்ஸ் கிலோ ரூபாய் 80-லிருந்து ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுதவிர மற்ற காய்கறிகள் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைக்கும் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோஸ் ரூ.40, உருளை கிழங்கு கிலோ ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.30, பீட்ரூட் ரூ.60, வெண்டைக்காய் ரூ.40-க்கும் விற்பனையானது.
சின்னவெங்காயம் விலை குறைந்தது
அதேபோன்று, கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது சற்று விலை குறைந்து கடந்த ஒருவாரமாக ரூ.60-க்கும், கத்தரிக்காய் ரூ.50-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.90 லிருந்து ரூ.120-க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் சின்ன வெங்காயம் கடந்த 15 நாட்களாக கிலோ ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை கடந்த 5 நாட்களாக மெல்ல விலை குறைந்து நேற்று கிலோ ரூபாய் 100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது.
200 ரூபாயை தாண்டும்
இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், வரத்து குறைவால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஓரிரு நாட்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு மேல் உயரவும் வாய்ப்பு உள்ளது என்கிற அதிர்ச்சியான தகவலையும் அவர் தொிவித்தார்.