மாவட்ட செய்திகள்
மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
|மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
மதுரை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை நேற்று மேலும் உயர்ந்து ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.
மதுரை மார்க்கெட்
திருவிழாக்காலங்கள், பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்த தினங்களில் மதுரை மல்லிகைப்பூவின் விலை உச்சத்தை தொடும்.
இந்தநிலையில், மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை களைகட்டி இருப்பதால், கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து வந்தது. அதன்படி, நேற்று முன்தினம் மதுரை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2500 என இருந்தது. நேற்று காலையில், மல்லிகை மட்டுமின்றி மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து விற்பனையானது.
கிலோ ரூ.3 ஆயிரம்
நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. பிச்சி ரூ.2000, முல்லை ரூ.1800, கனகாம்பரம் ரூ.1500, சம்பங்கி ரூ.200, பட்டன்ரோஸ் ரூ.300, அரளி ரூ.500 என விற்பனையானது. விலை உயர்ந்து இருந்தாலும், மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பூக்களை வாங்கி சென்றனர்.
இதுகுறித்து பூவியாபாரிகள் கூறுகையில், "பொங்கல் பண்டிகை காரணமாக பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. தற்ேபாது ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டும் இதே விலைதான் காணப்பட்டது. நாளை (அதாவது இன்று) இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளது. பனி தாக்கம் காரணமாக பூக்கள் வரத்து எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை" என்றனர்.
ராமநாதபுரம்-அருப்புக்கோட்டை
பொங்கல் பண்டிகையையொட்டி ராமநாதபுரத்தில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்து 600 என உச்சத்தை தொட்டு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.2 ஆயிரமாகவும், முல்லை ரூ.2 ஆயிரத்து 600 ஆகவும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்து 800 ஆகவும், ரோஜா ரூ.400 ஆகவும் விற்பனையானது.
அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகை பூ கிலோ ரூ.1,600-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.3 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்து 600 வரையிலும், பிச்சிப்பூ ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.