நாகப்பட்டினம்
இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை; 2 போலீசாருக்கு கத்திக்குத்து
|வேதாரண்யம் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடையவரை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்ததுடன், 2 போலீசாரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடையவரை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்ததுடன், 2 போலீசாரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருட்டு வழக்கு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில் வசித்து வருபவர் செல்லத்துரை(வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை தேடி வந்தனர்.
2 முறை சிக்கவில்லை
இந்த நிலையில் கோடியக்காட்டில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டதால் போலீசாரிடம் சிக்காமல் செல்லத்துரை தப்பிச்சென்று விட்டார்.
இவ்வாறு இரண்டு முறை போலீசார் தேடிச்சென்றபோது இரண்டு முறையும் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார்.
தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர்
இந்த நிலையில் செல்லத்துரை வீட்டில் இருக்கும் தகவல் அறிந்து அவரை பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், போலீஸ்காரர்கள் ராஜ்அய்யப்பன், சக்திவேல் ஆகிய 3 பேரும் நேற்று அதிகாலை சென்றனர்.
போலீசார் தங்கள் வீட்டுக்கு வருவதை அறிந்த செல்லத்துரையின் மனைவி ராணி(40), மகன் வீரக்குமார்(25), மகள் கலிபிரியா(20), மற்றும் செல்லத்துரையின் தாயார் பார்வதி(70) ஆகியோர் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டு போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளனர்.
இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; போலீசாருக்கு கத்திக்குத்து
மேலும் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை நோக்கி கட்டை, கற்களை வீசி தாக்கி உள்ளனர். அப்போது இன்ஸ்பெக்டர் மீது கட்டையால் தாக்கியதில் அவரது கை மூட்டு இறங்கியது. மேலும் அவரது தலையிலும் காயம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்து வெளியில் கத்தியுடன் வந்த செல்லத்துரை அங்கிருந்த போலீசாரை நோக்கி கத்தியை வீசினார். இதில் போலீஸ்காரர்கள் இருவர் மீதும் கத்தி கிழித்ததில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்த தாக்குதலில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீஸ்காரர்கள் ராஜ்அய்யப்பன், சக்திவேல் ஆகிய 3 பேரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக இன்ஸ்பெக்டர் குணசேகரன் திருவாரூர் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கோடியக்காட்டிற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
குளத்தில் குதித்து தப்ப முயன்றார்
இதை தொடர்ந்து செல்லத்துரையை கைது செய்ய வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், வெங்கடாஜலம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஏட்டு பாலமுருகன் ஆகியோர் சென்றனர்.
அப்போது அவரது வீட்டில் பதுங்கியிருந்த செல்லத்துரையை பிடிக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஏட்டு பாலமுருகன் ஆகியோரின் கைகளில் செல்லத்துரை கடித்து விட்டு தப்பி ஓடி அருகில் உள்ள குளத்தில் குதித்தார். இதைப்பார்த்த போலீசாரும் குளத்தில் குதித்து அவரை பிடித்தனர்.
தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது
இந்த சம்பவம் ெதாடர்பாக செல்லத்துரை மற்றும் அவரது மகன் வீரக்குமார், மகள் கலிப்பிரியா, தாயார் பார்வதி ஆகிய 4 பேரையும் வேதாரண்யம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள செல்லத்துரையின் மனைவி ராணியை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருட்டு வழக்கில் கைது செய்ய சென்ற போலீசாரை ஒரு குடும்பமே சேர்ந்து தாக்கிய சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.