கரூர்
கரூர் மார்க்கெட்டில் ஒரு கிலோ கேரட் ரூ.160-க்கு விற்பனை
|வரத்து குறைவால் கரூர் மார்க்கெட்டில் ஒரு கிலோ கேரட் ரூ.160-க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காய்கறிகளின் வரத்து குறைவு
கடந்த ஆவணி மாதத்தில் பெய்த தொடர் மழையால் மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் இருந்து சாகுபடி செய்த தக்காளி கரூர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால், கரூர் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்தது. ஆவணி மாதம் முழுவதும் தக்காளி 1 கிலோ 80 ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆவணி மாதத்தில் ஏராளமான முகூர்த்த நாட்கள் வந்ததாலும், கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்ததாலும் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. அதிலும் குறிப்பாக, தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதுவும் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஆனால் புரட்டாசி மாதம் பிறந்த பின்னர் தக்காளி விலை பெருமளவு குறைந்துள்ளது. தற்போது தக்காளி 1 கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
தாறுமாறாக உயர்ந்த கேரட் விலை
இதற்கிடையே, தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் எந்த முகூர்த்தமும் இல்லை. இதனால் தினசரி மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக 1 கிலோ கேரட் ரூ.160-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த 3 வாரங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு கேரட் வரத்து குறைந்தது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் கேரட் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. தற்போது கேரட் 1 கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் ஒரு வார காலத்திற்கு இதே நிலைதான் நீடிக்கும் என்றார்.