மனைவி உயிரைக் காப்பாற்ற வீட்டை விற்ற கணவர் - சொத்தில்லாத கணவன் வேண்டாம் என புது மாப்பிள்ளை தேடிய மனைவி
|கணவனிடம் சொத்துக்கள் இல்லாததால் அவரை விரட்டியடித்த மனைவி, தனக்கு விவாகரத்து ஆனதாக கூறி மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவனிடம் சொத்துக்கள் இல்லாததால் அவரை விரட்டியடித்த மனைவி, தனக்கு விவாகரத்து ஆனதாக கூறி மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பல்லடம் அருகே பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவர் முதலில் திருமணமான பெண்ணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், இரண்டாவதாக தங்கமணி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், மனைவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே, அவரை மருத்துவமனையில் அனுமதித்த முருகேஷ், மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஏற்பட்ட கடனை அடைக்க தனது வீட்டை விற்க நினைத்த முருகேஷிடம் இருந்து, அவரது தங்கையே வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிலையில், கணவன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நிற்பதையும், வசித்து வந்த வீட்டையும் விற்பனை செய்ததை அறிந்த தங்கமணி, தனது உறவினர்களுடன் சேர்ந்து கணவரை அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், தான் பணிபுரியும் இடத்திலே முருகேஷ் தங்கி வந்த நிலையில், தங்கைக்கு விற்பனை செய்த அவரின் வீட்டில் போலீசார் உதவியுடன் தங்கமணி அத்துமீறி நுழைந்து வசித்து வந்துள்ளார். தங்கமணி தங்களின் வீட்டை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், திருமணமானதை மறைத்தும், விவாகரத்து ஆனதாகவும் கூறி மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடி வருவதாக முருகேஷ் மற்றும் அவரின் தரப்பினர் புகாரளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.