< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்

தினத்தந்தி
|
21 Aug 2023 12:00 AM IST

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூரில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டம்

'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூர் மாவட்ட தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி ஆகியவற்றின் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் மாணிக்கம், துணை செயலாளர் லதா பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான சிவசங்கர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

'நீட்' தேர்வு பலி

மாணவர்களையும், பெற்றோர்களையும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் 'நீட்' தேர்வு அமைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவ கனவில் இருந்த பல மாணவ- மாணவிகளை 'நீட்' தேர்வு பலி கொண்டுள்ளது. எனவே 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் 'நீட்' தேர்வு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படாது என கவர்னர் ரவி பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ கனவில் இருக்கும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் 'நீட்' தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கடும் வெயில்

இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் கழக துணை அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தாயகம் ரவி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று வழக்கத்திற்கு மாறாக அரியலூரில் கடும் வெயில் அடித்தது. பந்தலை சுற்றிலும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதனைதொடர்ந்து அனைவருக்கும் குளிர்பானங்களை கொடுத்து போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராமராஜன் வரவேற்றார். முடிவில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சஞ்சய் குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்