திருவள்ளூர்
தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தரக் கோரி உண்ணாவிரத போராட்டம்
|தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தரக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கடம்பத்தூர் ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறனர். இந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவும், பஸ் நிலையம், ரெயில் நிலையம், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வரவும் கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடம்பத்தூருக்கு கூவம் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல பேருந்து வசதியும் கிடையாது.
மேலும் தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்புத்தூருக்கு செல்ல நேரடி இணைப்பு சாலை வசதி கிடையாது. இதனால் மழைக்காலங்களில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பிஞ்சிவாக்கம், அகரம் வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு அவதிப்பட்டவாறு சென்று வருகின்றனர்.
எனவே தண்டலம் அருகே உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் இதுநாள் வரையிலும் எந்த தீர்வும் காணப்படவில்லை.
மேலும் நுங்கம்பாக்கம், போளிவாக்கம், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், வெள்ளேரித்தாங்கல், கொப்பூர், பாப்பரம்பாக்கம், புதுவள்ளூர், இலுப்பூர், மற்றும் வலசைவெட்டிக்காடு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உரம் மற்றும் பூச்சி மருந்துகள், விதைகள் வாங்க கடம்பத்துருக்கு செல்ல வேண்டும். ஆனால் சரியான நேரடி இணைப்பு சாலை இல்லாததால் பலதரப்பட்ட மக்களும் அவதியுற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தண்டலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தங்களுக்கு நிரந்தர தீர்வாக கண்டு தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல வசதியாக கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித் தரக்கோரி தண்டலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
இதுப் பற்றி தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன், தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மணி ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் லதா ஒரு மாத காலத்திற்குள் இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.