< Back
மாநில செய்திகள்
தேவகோட்டையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்தபோது மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

தேவகோட்டையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்தபோது மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
10 Sept 2023 12:30 AM IST

தேவகோட்டையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 8 ஆண்டுக்கு முன்பு மாயமானவரா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

தேவகோட்டை

தேவகோட்டையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 8 ஆண்டுக்கு முன்பு மாயமானவரா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

எலும்புக்கூடு

தேவகோட்டை கம்பர் தெருவை சேர்ந்தவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் காம்பவுண்டு பின் பக்கம் 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். வாடகைக்கு உரிய வீடுகளுக்கு தனி கழிவறை தொட்டியும்,, வீட்டு உரிமையாளருக்கு தனி கழிவறை தொட்டியும் உள்ளது. அவை நிறைந்து வழிந்ததால் அதை வெளியேற்ற சுகாதார தொழிலாளர்களை கொண்டு நேற்று லாரி மூலம் சென்றனர்.முதலில் வாடகைக்கு குடியிருப்போரின் கழிவறையில் இருந்து எடுத்துச் சென்றனர்.

பின்னர் உரிமையாளரின் கழிவறையில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். திடீரென துணி தென்பட்டுள்ளது. கோட்டைச்சாமி என்பவர் உள்ளே பார்க்கும் போது எலும்புகளும், மண்டை ஓடுகளும் கிடந்துள்ளது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

மாயமானவரா?

அப்போது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே முகவரியில் குடியிருந்த பெண் தனது கணவரை காணவில்லை என நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன் பிறகு என்ன நடந்தது? என தெரியவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த வீட்டில் இதுவரை 5 குடும்பங்கள் குடியிருந்து காலி செய்து சென்று விட்டதாகவும், ஏற்கனவே கணவரை காணவில்லை எனக் கூறிய பெண் எங்கிருக்கிறார் என நகர் போலீசார் தேடி வருகின்றனர். அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினால் தான் இந்த மனித எலும்புக்கூடு விஷயத்தில் உண்மை தெரியவரும் என கூறப்படுகிறது.

தேவகோட்டையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்