< Back
மாநில செய்திகள்
கண்மாய்க்குள் கிடந்த மனித எலும்புக்கூடு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கண்மாய்க்குள் கிடந்த மனித எலும்புக்கூடு

தினத்தந்தி
|
27 Sept 2023 12:15 AM IST

பரமக்குடி அருகே கண்மாய்க்குள் கிடந்த மனித எலும்புக்கூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே கண்மாய்க்குள் கிடந்த மனித எலும்புக்கூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனித எலும்புக்கூடு

ராமநாதபுரம் பரமக்குடி அருகே போகலூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் முழுவதும் தற்போது காட்டு கருவேல மரங்களும், நாணல் புதர்களும் நிறைந்து காட்சியளிக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியில் சிலர் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஒரு புதருக்குள் மனித மண்டை ஓடு, கால் எலும்பு ஆகியவை கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், சத்திரக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளி ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பரபரப்பு

பின்னர் அவர்கள் கண்மாய் புதருக்குள் கிடந்த மனித எலும்புக்கூடுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் அவைகளை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த எலும்புக்கூடு யாருடையது? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்மாய்க்குள் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்