திருவள்ளூர்
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் ஊழியர் பலி
|பள்ளிப்பட்டு அருகே சாலையோரம் நடந்து சென்ற ஓட்டல் ஊழியர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பட்டு தாலுகா கோனாட்டம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 55). இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். வெங்கடராமன் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பள்ளிப்பட்டு பஸ் நிலையம் வந்த வெங்கட்ராமன் தனது கிராமத்திற்கு பஸ் இல்லாததால் நடந்து சென்று கொண்டிருந்தார்.
கல்லாமேடு பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் நகரி நோக்கி அதி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் வெங்கட்ராமன் பலத்த காயமடைந்தார். தகவல் கிடைத்ததும் உறவினர்கள் அங்கு சென்று அவரை ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெங்கட்ராமன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வெங்கட்ராமனின் மனைவி பத்மாவதி பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கட்ராமன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை வலைவீசி தேடி வருகின்றனர்..