திருவள்ளூர்
சோதனை சாவடியில் பணியின் போது மோட்டார் சைக்கிள் மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி
|ஊத்துக்கோட்டை அருகே சோதனை சாவடியில் பணியின் போது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஊர்க்காவல் படை வீரர் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பால்ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவர் ஊர்க்காவல் படை வீரர் ஆவார். இவருக்கு தீபா (45) என்ற மனைவியும், கண்ணன் (19) என்ற மகனும் உள்ளனர். கண்ணன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனி ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கத்தில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்தார்.
அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பழனி மீது மோதியது. இதில் தூக்கி வீசப் பட்ட அவர் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபர் தப்பி ஓடிவிட்டார். படு காயம் அடைந்த பழனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.