< Back
மாநில செய்திகள்
பெருகிவரும் பாஸ்ட்- புட் உணவகங்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

பெருகிவரும் 'பாஸ்ட்- புட்' உணவகங்கள்

தினத்தந்தி
|
23 March 2023 12:23 AM IST

உணவு பட்டியலை பார்த்தாலே நாவில் எச்சில் சுரந்துவிடுகிறது. எக் காளான், வெஜ் பிரைடு ரைஸ், எக் பிரைடு ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், காலி பிளவர் பிரை, சிக்கன் பிரைடு ரைஸ், காளான் நுடுல்ஸ், கொத்து பரோட்டா, கொத்து கறி, சிக்கன் கிரேவி போன்றவை தயாரிக்கும் பாஸ்ட் புட் கடைகளில் இளைஞர்கள் பட்டாளத்தைதான் எப்போதும் காணமுடிகிறது. இவற்றை துரித உணவு (பாஸ்ட் புட்) என்றும், அந்தக் ஓட்டல்களை துரித உணவகங்கள் என்றும் அழைக்கிறார்கள்.


சென்னை மாநகர் முழுவதும் புற்றீசல் போல் காணப்படும் இந்த வகை கடைகளில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பரபரப்பாக ஆர்டர் கொடுப்பதும், நட்சத்திர ஓட்டல் போன்று காத்திருக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் ஆர்டர் கொடுத்த அடுத்த வினாடி, உணவு சூடாகவும், சுவையாகவும், மணமாகவும் பரிமாறப்படுகின்றன. இந்த உணவகத்திற்கு அதிக மவுசு ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்தவகை உணவுகள் எந்த அளவுக்கு சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றன என்பன குறித்து இளைஞர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

விரும்பி சாப்பிடுகின்றனர்

பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த நடராஜன்:- முன்பெல்லாம் வீடுகளில் சாப்பிடுவதற்கு ஏதாவது பலாகாரம் செய்து வைப்பார்கள். தற்போது நேரமின்மை, வேலைபாடுகளால் பலாகாரம் உள்ளிட்டவைகளை வீடுகளில் செய்யாமல் கடைகளில் வாங்கி சாப்பிடுகின்றோம். தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேர் துரித உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக நொடி பொழுதில் தயாராகும் நூடுல்ஸ், பீட்சா, பிரைடு ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகளை குழந்தைகள், பெண்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். துரித உணவுகள் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருள் மற்றும் ரசாயனங்கள் மனித உடலுக்கு ஊறு விளைவிக்கிறது. துரித உணவுகளை விரும்பி சாப்பிடும் குழந்தைகள் உடல் பருமன் அடைந்து குண்டாக இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம். துரித உணவுகளை தவிர்த்து வீடுகளில் இயற்கை உணவுகளை தயார் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

அரியலூரை சேர்ந்த துரித உணவு மாஸ்டரும், உணவக உரிமையாளருமான சக்கரவர்த்தி:- இன்றைய இளைஞர்கள் துரித உணவுகளை விரும்புவதற்கான காரணம். தேவைப்படும் நேரத்தில் கிடைக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கிடைக்கிறது. உடனுக்குடன் தயாராகி சூடாக கிடைக்கிறது. உதாரணத்திற்கு இட்லிக்கு மாவு ஆட்டி அது புளித்து செய்வதற்கான நேரம் அதிகம். அதே நேரத்தில் துரித உணவுகள் விரைவான நேரத்தில் தயாராகிறது. இளைஞர்கள் அதிக அளவு அசைவ உணவு பிரியர்களாக உள்ளதால் துரித உணவுகள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. துரித உணவுகளில் சைனீஸ் தந்தூரி, நாண், கிரேவி உள்ளிட்ட உணவு பொருட்கள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் நூடுல்ஸ் அதிக அளவு விற்பனை ஆகிறது. துரித உணவுகள் விலை குறைவாக கிடைப்பதாலும், உடனுக்குடன் கிடைப்பதாலும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அதிக அளவு விரும்புகின்றனர்.

பாரம்பரிய உணவு முறைகள்

தா.பழூரை சேர்ந்த புருஷோத்தமன்: துரித உணவுகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் துரித உணவுகள் நன்கு சுவையாக இருக்கிறது. அந்த சுவையை உண்ணும்போது மனம் சந்தோஷமாக இருக்கிறது. உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்பட்டாலும், எப்போதாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்று நினைக்கிறேன். நமது கண்ணுக்கு முன்னால் துரித உணவுகளை தயாரிக்கும் போது ஏற்படும் நறுமணம் நம்மை ஈர்க்கிறது. தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து தெரியவில்லை.

அரியலூர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பிடித்த உணவு துரித உணவாக மாறிவிட்டது. இட்லி, தோசை சாப்பிட்டு சலித்துப்போன காரணத்தினால் ஒரு மாற்றத்திற்காக பீட்சா, பர்கர், சாண்ட்விச், சிக்கன் ரைஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட ஆரம்பித்தோம். ஆனால் காலப்போக்கில் அதற்கு அடிமையாகி விட்டோம். அதன் சுவை மற்றும் கவர்ந்திழுக்கும் கலரினால் எங்கள் மனதை பறிகொடுத்து விட்டோம். சிலர் துரித உணவுகள் கெடுதல் எனக் கூறினாலும் அதன் மீதான நாட்டம் குறையவில்லை. எப்போது சென்றாலும் கிடைக்கிறது, எந்த இடத்திலும் கிடைக்கிறது. தெருக்களில் விற்கப்படும் துரித உணவுகளின் விலையும் குறைவாக உள்ளது என்பதாலும் அதனை விரும்பி உண்கிறோம். மொத்தத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகள் சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன என்பது வேதனையாகவும் உள்ளது.

ஆரோக்கியத்துடன் வாழ்வோம்

இன்றைய வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது. வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் சமையல் என்பது மற்றும் சமைபதற்கான நேரம் குறைந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் துரித உணவுகளை நாடி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. தேசிய சத்துணவு கழகம் துரித உணவுகளில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை அதிகம் உள்ளதாக கூறுகிறது. துரித உணவுகளில் அஜினமோட்டா அதிக அளவு சேர்ப்பதாலும், உணவு பதப்படுத்துவதில் கெமிக்கல் சேர்ப்பதாலும் அதனுடைய இயல்பு தன்மை மாறுகிறது. அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பதால் இருதய நோய், பக்கவாத நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பற்களில் வரும் நோய், எலும்பு மூட்டுகளில் தேய்மானம் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்சத்து காரணமாக மலச்சிக்கல் செரிமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடல் பருமன் ஏற்படுவதால் மனச்சோர்வு ஏற்படுகிறது. வயிறு குடல் துரித உணவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நோய்கள் ஏற்படுகின்றன. துரித உணவுகளை தவிர்ப்போம் நலமாய் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

திடீர் சோதனை

மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சாலையோர பாஸ்ட் புட் கடைகளில், இறைச்சி வகைகளை, மது அருந்துபவர்கள் வாங்குகின்றனர். இதனால் சுகாதாரமற்ற உணவு வகைகளை உட்கொள்பவர்களுக்கு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பு ஏற்படுவதாக புகார்களும் வருகின்றன. இதனால் சாலையோர உணவகங்கள், ஓட்டல்களில் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகிறோம். உணவு பொருட்கள் மாதிரியும் எடுக்கப்படுகிறது. கெட்டுப் போன இறைச்சிகள், மீன்கள் போன்ற உணவுகளை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு கெடுதல் இல்லாமல் தரமான உணவுகளை தயாரித்து நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்' என்றார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்